பூதமாக பிரபுதேவா குழந்தைகளை மகிழ்வித்தாரா? மை டியர் பூதம் விமர்சனம்! 811044128
பூதமாக பிரபுதேவா குழந்தைகளை மகிழ்வித்தாரா? மை டியர் பூதம் விமர்சனம்!
அதே அலாவுதீன் பாணி திரைப்படம் தான் இந்த மை டியர் பூதம். முனிவரிடம் மகன் பெற்ற சாபத்தை அப்பா பூதமான கர்க்கிமுகி (பிரபுதேவா) வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார். அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (சூப்பர் டீலக்ஸ் புகழ் மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும், அதை திருநாவுக்கரசு செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
மைடியர் பூதம் திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை டார்கெட் செய்தே உருவாக்கப்பட்டது. அதிலும், 10 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் இந்த படத்தை தாராளமாக என்ஜாய் பண்ணுவார்கள். மற்றபடி பெரியவர்களை கனெக்ட் செய்ய இயக்குநர் திரைக்கதையில் சில இடங்களில் முயற்சித்துள்ளார். ஆனால், அது அவ்வளவாக கனெக்ட் ஆகவில்லை என்பது மை டியர் பூதம் படத்துக்கு பின்னடைவாக மாறி உள்ளது.
தன்னுடைய பூத லோகத்தில் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் கர்க்கிமுகி பூதம் மகன் கண்ணாமூச்சி விளையாட்டில் ஒரு புத்துக்குள் சென்று ஒளிந்து கொள்ள அங்கே தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் சாபத்தை பெறுகிறார். முனிவரிடம் மன்றாடி அந்த சாபத்தை தனக்கு அளிக்க வேண்டுகிறார். சாபம் பெற்று சிலையாக மாறி உள்ள பூதத்தை மாஸ்டர் அஸ்வத் விடுவிக்கிறார். அவருடன் பக்கா கெமிஸ்ட்ரி ஒத்துப் போய் பிரபுதேவா நடித்துள்ளார். இந்த படத்திற்காக மொட்டைப் போட்டு நடித்துள்ள பிரபுதேவா, குழந்தைகளை கவர தனது ஒட்டுமொத்த காமெடி நடிப்பை இறக்கி இருப்பது பாராட்டுக்களை பெறுகிறது.
சூப்பர் டீலக்ஸ் படத்திலேயே தான் எப்படியொரு நடிகர் என்பதை நிரூபித்தவர் மாஸ்டர் அஸ்வத். திருநாவுக்கரசர் என்கிற பெயரோடு இந்த படத்தில் நடித்துள்ள அவருக்கு திக்குவாய் பிரச்சனை உள்ளது. அதன் காரணமாக பள்ளியில் சக மாணவர்கள் அவரை கடுமையாக கிண்டல் செய்கின்றனர். டீச்சராக வரும் பிக் பாஸ் சம்யுக்தாவும் அஸ்வத்தை கலாய்ப்பது கொஞ்சம் ஓவர் தான். சரஸ்வதி சபதம் படத்தில் வரும் வசனத்தை மேடையில் அஸ்வத்தை பர்ஃபார்ம் பண்ண வைத்து பிரபுதேவா பூதம் அவரை பள்ளியில் ஹீரோவாக்கும் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.
பிரபுதேவாவின் நடிப்பு மற்றும் மாஸ்டர் அஸ்வத்தின் அந்த நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்த இருவரது நடிப்புக்காக படத்தை பார்க்கலாம். ஜாலியான காட்சிகளை விட, எமோஷனல் ஆன காட்சிகளில் இருவரது நடிப்பும் அபாரம். குழந்தைகளை கவரும் நோக்கத்துடன் சமூக கருத்தையும் திரைக்கதையில் கொண்டு வந்த இயக்குநரின் முயற்சியும் படத்திற்கு பிளஸ் ஆக உள்ளது.
கோடை விடுமுறையில் படத்தை வெளியிட்டு இருந்தால், குழந்தைகள் பெற்றோர்களை அடம் பிடித்தாவது இந்த படத்திற்கு கூட்டிட்டுப் போயிருப்பாங்க.. ஆனால், படக்குழுவினர் லீவ் எல்லாம் முடிந்து இப்போ வரும் ஜூலை 15 ரிலீஸ் செய்யப் போவது, படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறிவிடும் என்பது கன்ஃபார்ம். குழந்தைகளை கூட்டிச் செல்லும் பெற்றோர்களை இந்த படம் மகிழ்விக்குமா? என்பது பெரிய கேள்விக் குறி தான். சிஜி காட்சி எல்லாம் ராமநாராயணன் காலத்து சிஜியாக இருப்பதும் ரம்யா நம்பீசனின் அம்மா கதாபாத்திரம் என ஏகப்பட்ட மைனஸ்கள் மை டியர் பூதத்திற்கு இருந்தாலும், இந்த வாரம் வெளியாக உள்ள கலைப் படைப்புகளுக்கு மத்தியில் ஜனரஞ்சகமான படமாக இந்த படம் வெளியாவது கமர்ஷியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். மை டியர் பூதம் - குழந்தைகளுக்காக!
Comments
Post a Comment